
நீலாய், செப்.-4–சிலாங்கூரில் ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட நான்கு வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளில், 42.82 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய 722 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் கஞ்சா மொட்டுகள், MDMA, மெத்தாம்பேட்டமைன், கெத்தாமின் ஆகியவையும் அடங்கும் என அரச மலேசிய சுங்கத்துறை தலைமை இயக்குனர் Datuk Seri Amran Ahmad தெரிவித்தார்.
ஜூலை 21-ஆம் தேதி ஷா ஆலாம், செக்சன் 27ழில் உள்ள கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையில் 25.28 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள 505.6 கிலோ கெத்தாமின் பறிமுதல் செய்யப்பட்டது. சவூதி அரேபிய அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட அச்சோதனையில், 119 பொட்டலங்களில் அவை கொக்கோ பவுடர் பொட்டலங்களுடன் வணிகப் பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தொடர்பில் 30 வயது மதிக்கத்தக்க உள்ளூர் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
அனைத்துலக போதைப்பொருள் கும்பல்கள் மலேசியாவை transit எனும் இடைமாற்று மையமாக அல்லது போதைப்பொருள் சந்தையாகப் பயன்படுத்துவது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்திலிருந்து கொண்டு வரப்படும் சில போதைப்பொருட்கள் மலேசியா வழியாக பிற சந்தைகளுக்கு கடத்தப்படுவதாகவும், அமலாக்க அதிகாரிகளின் கவனத்தைத் திசை திருப்புவதே அவற்றின் நோக்கம் எனவும் Amran கூறினார்.
ஜூலை 8-ஆம் தேதி கிள்ளான், Bandar Botanic பகுதியில் 12.84 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 160.6 கிலோ கஞ்சா மொட்டுகள் கைப்பற்றப்பட்டு, ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அதற்கு முந்தைய நாள் Meru பகுதியில் உள்ள கிடங்கில் 4.11 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள 51.4 கிலோ கஞ்சா மொட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஜூலை 9-ஆம் தேதி KLIA-விலுள்ள போஸ் மலேசியா அனைத்துலக மையத்தில் சிக்கிய பொட்டலத்தில் 587,500 ரிங்கிட் மதிப்பிலான 3.3 கிலோ MDMA மற்றும் 2 கிலோ மெத்தாம்பேட்டமைன் கண்டுபிடிக்கப்பட்டன.
அந்நான்கு சோதனை நடவடிக்கைகளிலும் கைது செய்யப்பட்டவர்களில் சிலர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் 1952-ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B(1)(a)-ன் கீழ் விசாரிக்கப்படுகின்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் சிறைத்தண்டனையுடன் குறைந்தது 12 பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
இவ்வேளையில், போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க அரச மலேசிய காவல் படையின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை, வெளிநாட்டு அமலாக்க அமைப்புகள் ஆகியவற்றுடன் அரச மலேசிய சுங்கத்துறை நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருவதாக Amran குறிப்பிட்டார்.



