
சுபாங், ஆகஸ்ட்-15,சிலாங்கூர், சுபாங், சுல்தான் அப்துல் அசிஸ் ஷா விமான நிலையத்தில் இன்று ஹெலிகாப்டர் ஒன்று வெடித்து தீப்பற்றி எரிந்த விபத்தில், அதில் இருந்த நால்வர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தகவல்படி, இன்று நண்பகல் 12.30 மணியளவில் விமான நிலையத்தின் Karbon MRO வளாகத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பழுதுபார்ப்புப் பணிகளுக்குப் பிறகு, இயந்திர செயல்பாட்டைப் பரிசோதிப்பதற்காக ஹெலிகாப்டர் புறப்படத் தயாரானபோது எதிர்பாராதவிதமாக இந்த வெடிப்புச் சம்பவம் நேர்ந்தது.
தகவல் கிடைத்த 4 நிமிடங்களிலேயே புக்கிட் ஜெலுத்தோங் நிலையத் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, விமான நிலைய அவசரக் குழுவினருடன் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஹெலிகாப்டர் முழுமையாகத் தீக்கிரையாவதற்கு முன்பாகவே அதிலிருந்த நால்வரும் பத்திரமாக வெளியேறிவிட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இவ்விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதோடு, விமான நிலையப் பணிகள் தற்போது வழக்கம் போல் சீராக இயங்கி வருகின்றன.



