
சிகமாட், ஏப்-3-ஜாலான் ஜோகூர் பாரு-செரம்பான் சாலையில் 210ஆவது கிலோமீட்டரில் , கெமாஸ் பாரு, Simpang Taman Golden Hill அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை ஏற்றிச் சென்ற வேனின் பின்புறத்தில் டிரெய்லர் லோரி மோதியதில், மூவர் உயிரிழந்தனர்.
ஒரு டிரெய்லர் லோரி, ஒரு லோரி மற்றும் ஒரு வேன் ஆகிய மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் திருமணமான தம்பதி தம்பதியரான கணவன், மனைவி மற்றும் மனைவியின் சகோதரரான வேன் ஓட்டுநரும் இறந்தனர்.
நேற்று மாலை மணி 3.45 அளவில் நடந்த இந்த விபத்தில் வேனின் பிற்புறம் டிரெய்லர் லோரி மோதியதைத் தொடர்ந்து அந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் எதிர்புறம் நுழைந்ததால் ஒரு லோரியுடன் மோதியதாக ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ Rahaman Arsad தெரிவித்தார்.
சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மூவர் மரணம் அடைந்தனர். வேனில் இருந்த இரண்டு பயணிகள் சொற்ப காயத்திற்கு உள்ளானதால் அவர்கள் செகமாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்திற்குக் காரணமாக இருந்த டிரெய்லர் லோரி ஓட்டுநரை நான்கு நாட்களுக்குத் தடுத்து வைப்பதற்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
29 வயதான சந்தேக நபருக்கு எதிரான தடுத்து வைக்கும் உத்தரவை இன்று முதல் திங்கட்கிழமை வரை மாஜிஸ்திரேட் Amalina Johar பிறப்பித்துள்ளார்.
1987 ஆம் ஆண்டின் சாலை போக்குவரத்து சட்டம் பிரிவு 44 ( 1) (a) மற்றும் 1952 ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் பிரிவு 15 (1) ( a) ஆகியவற்றின் கீழ் போலீஸ் துறை விசாரணையை மேற்கொள்ளும் வகையில் சந்தேகப் பேர்வழி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
விபத்து நடந்தவுடன் அந்த டிரெய்லர் லோரி ஓட்டுநரிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர் Methampethamine போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டதாக செகமாட் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Mohd Jumazanzahir chek ismail கூறினார்.



