
புத்ராஜெயா, ஆகஸ்ட்-22-அபாயகரமான ‘மெத்தனால்’ (Methanol) வேதிப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, Chomel நிறுவனத்தின் 3 வகை கை சுத்திகரிப்பான்களுக்கு (Hand Sanitiser) சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது.
தேசிய மருந்து ஒழுங்குமுறை அமைப்பான NPRA-வின் ஆய்வில், BN111025, BN01026, மற்றும் BN061225 ஆகிய தொகுதி எண்களைக் கொண்ட இந்த கிருமிநாசினி சுத்திகரிப்பான்களில் அதிக நச்சுத்தன்மை வாய்ந்த மெத்தனால் இருப்பது தெரியவந்துள்ளது.
சுகாதாரப் பயன்பாட்டுப் பொருட்களில் மெத்தனாலைப் பயன்படுத்துவது முற்றிலும் தடைச் செய்யப்பட்டுள்ளது.
இந்த வேதிப்பொருள் தோல் வழியாக உறிஞ்சப்படும்போது கண் எரிச்சல், தலைசுற்றல், பார்வைக் குறைபாடு மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
தீவிர பாதிப்பு ஏற்பட்டால் அது கோமா நிலைக்கு அல்லது உயிரிழப்புக்கு கூட வழிவகுக்கும் என KKM எச்சரித்துள்ளது.
எனவே, விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இந்தத் தயாரிப்புகளைச் சந்தையிலிருந்து உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
தவறினால் கடுமையான சட்ட நடவடிக்கை பாயும்.
பொது மக்களும் இந்தப் குறிப்பிட்ட தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறும், உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



