
ஜாசின், ஜூன்-29-இந்தப் பருவத்தில் டுரியான் பழங்களின் விலை வீழ்ச்சியடைந்து வந்தாலும், அது இன்னமும் கொள்ளையர்களின் முக்கிய இலக்காகவே இருந்து வருகிறது.
மலாக்கா, ஜாசினில் உள்ள ஒரு டுரியான் தோட்டத்தில் கத்திமுனையில் கொள்ளையடித்த சம்பவத்தில் 4 பேரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
Bemban, Anjung Gapam-மில் உள்ள ஒரு டுரியான் தோட்டத்தில் சனிக்கிழமை காலை இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தோட்டத்தில் காவலில் இருந்த 2 பதின்ம வயது சிறுவர்களை மிரட்டிய 3 கொள்ளையர்கள், 4 பெரிய கூடைகள் நிறைந்த பிரீமியம் இரக “IOI” டுரியான் பழங்களை காரில் ஏற்றியுள்ளனர்.
இதனைத் தட்டிக்கேட்ட ஒரு சிறுவனை, கொள்ளையர்கள் கத்தியைக் காட்டி மிரட்டியதோடு, அங்கிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட ஜாசின் போலீஸார், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடத்திய அதிரடிச் சோதனைகளில் 27 முதல் 35 வயதுடைய 4 சந்தேக நபர்களைக் கைதுச் செய்தனர்.
அவர்களிடம் இருந்து கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட கார், கத்தி மற்றும் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.
எனினும், திருடப்பட்ட டுரியான் பழங்கள் மீட்கப்படவில்லை. கைதுச் செய்யப்பட்டவர்களில் மூவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய ‘Wan Linggi’ என்ற மற்றொரு முக்கிய குற்றவாளியை போலீஸார் இன்னும் தேடி வருகின்றனர்.



