
கூலாய், ஜூலை 27 – தொழில் உரிமம் ரத்து செய்யப்பட்ட நெட்வொர்க் பள்ளி (Network School) இதுவரை எந்தவொரு மேல்முறையீட்டு விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்று ஜோகூர் மாநில வீடமைப்பு மற்றும் உள்ளாட்சிக் குழுத் தலைவர் டத்தோ முகமட் ஜாப்னி முகமட் ஷுக்கோர் தெரிவித்தார்.
இஸ்கண்டார் புத்ரி மாநகராட்சி (MBIP), பள்ளி இரண்டு உரிம நிபந்தனைகளை மீறியதைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து அதன் தொழில் உரிமத்தை ரத்து செய்தது. விளம்பர பலகை விதிமுறைகளை மீறியதுடன், உரிமத்தில் குறிப்பிடப்பட்ட தொழில் நடவடிக்கைகளுக்கும், உண்மையில் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளுக்கும் இடையே முரண்பாடு இருந்ததாக அவர் கூறினார்.
புதிய நிறுவனம் அமைத்து, நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் புதிய விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என்றும், அதேவேளை ஜோகூர் மாநிலம் முதலீட்டாளர்களுக்கு உகந்த மாநிலமாகத் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஜூலை 22ஆம் தேதி, உரிம நிபந்தனைகளை மீறியதால் அப்பள்ளி நிறுவனத்தின் தொழில் உரிமம் ரத்து செய்யப்பட்டு, அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்த உத்தரவிடப்பட்டது. பின்னர், அதன் வளாகம் அதிகாரிகளால் மூடப்பட்டு முத்திரையிடப்பட்டது.



