
புத்ராஜெயா, செப்டம்பர்-22,தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் டியூஷன் மையங்களை நடத்தும் தனியார் வர்த்தக நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 30 விழுக்காடு பூமிபுத்ரா பங்குரிமை விதிமுறை இனி நடைமுறையில் இருக்காது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சுடன் (MITI) நடத்தப்பட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த முடிவு எட்டப்பட்டதாகக் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
நாட்டின் கல்வி மேம்பாட்டுக்குப் பங்களிக்க விரும்பும் அனைத்துத் தரப்பினருக்குமான வாய்ப்புகளைத் திறந்து வைக்கும் நோக்கிலும், தற்போதைய கல்வித் துறையின் தேவைகளைக் கருத்தில் கொண்டும் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது.
கடந்த 2006-ஆம் ஆண்டு தனியார் கல்வி நிறுவனக் கொள்கைக் குறிப்பேட்டில் இடம்பெற்றிருந்த இந்த 30 விழுக்காடு விதிமுறை, வரும் 2027-ஆம் ஆண்டில் உரிமங்களைப் புதுப்பிக்கும் போது கட்டாயமாக்கப்படலாம் என்ற கவலை டியூஷன் மைய உரிமையாளர்கள் மத்தியில் அண்மையில் எழுந்திருந்தது.
அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்நிலையில், முடிவை மாற்றியுள்ள அமைச்சு, கல்வித் துறையில் தனியார் டியூஷன் மையங்களின் நீண்டகாலப் பங்களிப்பைப் பாராட்டியதோடு, மாணவர்களின் நலன் கருதி அனைத்துத் தரப்பினருடனும் தொடர்ந்து இணைந்து செயல்படவும் உறுதியளித்துள்ளது.



