
கோலாலம்பூர், ஏப் 24 – கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மலாக்கா டுரியான் துங்கால் பகுதியில் மூன்று பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்களை சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் போலீஸ் சமர்ப்பித்துவிட்டது.
விசாரணை ஆவணங்கள் முழுமையடிந்து சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால் நாங்கள் அவர்களிடமிருந்து இதர அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என குற்றப் புலனாய்வுத் துறையின் தலைமை இயக்குநர் M. குமார் தெரிவித்தார்.
புக்கிட் அமானில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இத்தகவலை வெளியிட்டார். தனிநபர்கள் மீது முன்மொழியப்பட்ட குற்றச்சாட்டுகள் உட்பட, இதுகுறித்து தனது துறையால் மேலும் கருத்து தெரிவிக்க இயலாது என்றும் அவர் கூறினார்.
டுரியான் துங்கால் சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்களை சட்ட அமலாக்க ஆணையம் முழுமையாக ஆய்வு செய்து வருவதாக நேற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
சட்ட அமலாக்க ஆணையம், ஒரு அறிக்கையின் மூலம், ஏப்ரல் 17 ஆம் தேதி போலீசிடமிருந்து விசாரணையின் முன்னேற்றம் குறித்த தகவல்களைப் பெற்றதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கையைத் தீர்மானிப்பதற்காக தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் தற்போது ஆய்வு செய்து வருவதாகவும் அறிவித்தது.



