Latestமலேசியா

தமிழகத்தில் முதல் செயற்கை நுண்ணறிவு உச்சநிலை மாநாடு 2026 வெற்றிகரமாக நிறைவு

சென்னை, ஆகஸ்ட்.10-மூன்றாவது அனைத்துலக தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக 2026 செயற்கை நுண்ணறிவு உச்சநிலை மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள், சென்னை விஐடி தொழில்நுட்பப் பல்கலைக்கழகவளாகத்தில் சிறப்பாக நடைபெற்றன.

அம்மாநாட்டில் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் Jagdeep Singh Deo சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். கல்வி, தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த, தமிழ்நாடு அரசின் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுச் சேவைகள் துறை அமைச்சர் ஆர். குமார் பினாங்கு வர வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

இவ்வேளையில், செயற்கை நுண்ணறிவை தொடர்ந்து கற்றுக் கொண்டு மாணவர்கள் தங்களது அறிவையும் திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என அமைச்சர் ஆர். குமார் தமதுரையில் வலியுறுத்தினார். “கற்றது கைம்மண்ணளவு; கல்லாதது கடலளவு”எனக் சுட்டிக் காட்டிய அவர், AIயைப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குபவர்களாக மாணவர்கள் உயர வேண்டும் என்றார்.

தமிழ்நாடு அரசு செயற்கை நுண்ணறிவை நிர்வாகம், பொதுமக்கள் சேவை, திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்நிகழ்வில் விஐடி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் ஜி. விஸ்வநாதன், துணைத் தலைவர் டாக்டர் ஜி.வி. செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களைக் கௌரவித்தனர்.

உலகத் தமிழ் வர்த்தகச் சங்கத்தின் தலைவர் ஜெ. செல்வகுமார், அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் பி. குமரேசன், விஐடி பல்கலைக்கழகத்தின் கூடுதல் பதிவாளர் பி.கே. மனோகரன், தொழில்நுட்பத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த ஏர்செல் நிறுவனத்தின் நிறுவனர்சி. சிவசங்கரன், மூத்த இயக்குநர் மற்றும் மேகக் கணினியியல், இணையப் பாதுகாப்புத் துறைத் தலைவர் சுரேஷ் ஜானகிராமன், தென் கொரியாவின் பேராசிரியர் டாக்டர் சேஜூன் லீ உள்ளிட்ட பல நிபுணர்களும் தலைவர்களும் அந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!