
ஒஸ்லோ, அக்டோபர்-10,
2026-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளி மனித உரிமைப் போராளியும் முன்னாள் நீதிபதியுமான நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துலக சட்டம், மனித உரிமைகள் மற்றும் உலக அமைதியை நிலைநாட்டுவதில் இவர் ஆற்றிய நீண்டகாலப் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், நோர்வே நோபல் குழு இந்த அறிவிப்பை வெளியிட்டது.
85 வயதான நவநீதம் பிள்ளை, 1941-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் டர்பன் (Durban) நகரில் தமிழ் வம்சாவளிக் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.
இனவெறிக் கொள்கைகள் நடைமுறையில் இருந்த காலத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிய இவர், தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா உள்ளிட்ட இனவெறிக்கு எதிரான போராளிகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர்.
1967-ஆம் ஆண்டில் நடால் மாநிலத்தில் சட்ட நிறுவனத்தைத் தொடங்கிய முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றார்.
1995-ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்க உயர் நீதிமன்றத்தின் முதல் கறுப்பினப் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர், பின்னர் ருவாண்டா இனப்படுகொலை தொடர்பான அனைத்துலகக் குற்றவியல் நடுவர் மன்றத்திலும் பணியாற்றினார்.
பாலியல் வன்முறைகளும் இனப்படுகொலைக் குற்றங்களாகக் கருதப்படலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத் தீர்ப்பை உருவாக்குவதில் நவநீதம் முக்கியப் பங்காற்றினார்.
2008 முதல் 2014-ஆம் ஆண்டு வரை ஐநா சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையராகவும் பதவி வகித்தார்.
பாலஸ்தீனத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐநா விசாரணை ஆணையத்திற்கும் இவர் தலைமைத் தாங்கியுள்ளார்.
பல தசாப்தங்களாக மனித உரிமைகள், நீதி மற்றும் அனைத்துலகச் சட்டத்தின் பாதுகாப்புக்காகப் போராடி வரும் நவநீதம் பிள்ளைக்கு வழங்கப்பட்டுள்ள இந்த உயரிய விருது, உலகத் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது.



