
சிரம்பான், ஏப் 29-மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து தேசிய முன்னணி அல்லது எதிர்க்கட்சியின் எந்தவொரு பிரதிநிதிகளும் தம்மிடம் பேச்சு நடத்தவில்லையென நெகிரி செம்பிலான் மந்திரிபெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன் உறுதிப்படுத்தினார்.
மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய, தனது சிறுபான்மை அரசாங்கம் வழக்கம் போல் செயல்படுவதாக அவர் கூறினார் .
இதுவரை, தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்ற 14 தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர்களுடன் தாம் எதுவும் விவாதிக்கவில்லை என்றும் அது குறித்த தகவல் வெளியான தினத்தன்று அதனை உறுதிப்படுத்துவதற்காக அவர்களில் பலரைத் தொடர்புகொள்ள முயன்றதாகவும் , ஆனால் அவர்களின் தொலைபேசிகள் அணைக்கப்பட்டிருந்ததாக அமினுடின் தெரிவித்தார்.
சில அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கட்சிக்குத் திரும்ப விரும்புவதாகக் கூறப்படும் தகவல்கள் குறித்து தனக்கு எந்தத் தகவலும் தெரியாது என மாநில ஆட்சிக் குழு கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அமினுடின் கூறினார்.
இறுதி முடிவு எட்டப்படும் வரை கடமைகளைத் தொடருமாறு PKR தலைவர் டத்தோஸ்ரீ அன்வாரும் தம்மிடம் கேட்டுக்கொண்டதாக அமிருடின் குறிப்பிட்டார்.



