
கோலாலம்பூர், செப்.03-செயற்கை மழையை உருவாக்கும் மேக விதைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள தேர்வு செய்யப்படும் இடங்கள், தற்போதைய தேவையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறையான METMalaysia தெரிவித்திருக்கிறது.
குறிப்பாக மழை குறைவாகப் பெய்யும் பகுதிகள், வெப்பநிலை அதிகரித்து வரும் இடங்கள், புகைமூட்டம் காரணமாக காற்றின் தரம் மோசமடையும் அபாயம் உள்ள பகுதிகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அது கூறியது.
மேக விதைப்பு நடவடிக்கைக்கான இடங்களைத் தேர்வு செய்யும் போது தேசிய பேரிடர் நிர்வாக மன்றம் NADMAவுடனும் சம்பந்தட்ட நிறுவனங்களுடனும் ஒருங்கிணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
காற்றின் தரம் மோசமடையும் அபாயம் அதிகமாகவும், மேக விதைப்புக்கு ஏற்ற மேக உருவாக்கத்திற்கான சாத்தியம் உள்ள பகுதிகளும் முதலில் கவனத்தில் கொள்ளப்படும் என METMalaysia தலைமை இயக்குநர் Dr Mohd Hisham Mohd Anip தெரிவித்தார்.
மேக விதைப்பு நடவடிக்கைக்கு 7 முதல் 14 நாட்களுக்கு முன்பாகவே வளிமண்டல நிலை கண்காணிக்கப்படும்.
ஏற்ற மேகங்கள் உருவாகும் வாய்ப்பு, அதிக ஈரப்பதம், காற்றின் திசை, அதன் வேகம், வளிமண்டல நிலைத்தன்மை மற்றும் இலக்கு வைக்கப்பட்ட பகுதியில் மழை பெய்யும் சாத்தியம் உள்ளிட்ட காரணங்களும் ஆய்வு செய்யப்படும்.
தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் சரியாக இருந்தால் மட்டுமே மேக விதைப்பு நடவடிக்கை பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் மேற்கொள்ளப்படும் என அவர் விளக்கினார்.
மேக விதைப்பு மூலம் இலக்கு வைக்கப்பட்ட பகுதிகளில் மழைப் பொழிவை அதிகரித்து, காற்றில் உள்ள மாசுகளையும் துகள்களையும் மழையின் மூலம் தரையில் படியச் செய்து புகைமூட்டத்தின் தாக்கத்தை தற்காலிகமாகக் குறைக்க முடியும்.
எனினும், அது புகைமூட்டப் பிரச்சினைக்கான முழுமையான தீர்வு அல்ல. வெப்பம் மற்றும் வறண்ட காலங்களில் திறந்தவெளி எரிப்புக்கான தடையை அமல்படுத்துதல், காட்டுத் தீ மற்றும் பிற தீப்பரவல்களை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என Mohd Hisham வலியுறுத்தினார்.
அதிகரித்து வரும் புகைமூட்டத்தைத் தொடர்ந்து செப்டம்பர் 3 முதல் 5ஆம் தேதி வரை சரவாக், கெடா மற்றும் பெர்லிஸில் மேக விதைப்பு மேற்கொள்ளப்படும் என துணைப் பிரதமர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi முன்னதாக அறிவித்திருந்தார். NADMA, METMalaysia, அரச மலேசிய ஆகாயப்படை ஆகியவை இணைந்து சரவாக்கில் 8 இடங்களிலும், கெடாவில் 4 இடங்களிலும், பெர்லிஸில் ஓர் இடத்திலும் கட்டம் கட்டமாக அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.



