
கிள்ளான், மே-9-ஒரு நீண்ட வேலை நாளுக்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பும் போது, உங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கிகள் அனைத்தும் பழுதடைந்திருந்தால் உங்கள் நிலை என்ன?
கேட்பதற்கே பயமாக இருக்கும் நிலையில், கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு குடும்பத்திற்கு நேர்ந்த இந்த அவலநிலை இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிறியக் குழந்தைகள் உள்ளிட்ட ஒரு குடும்பம் தங்கள் வீட்டுக்குச் செல்ல ஒன்றல்ல இரண்டல்ல..36 மாடிகள் படிக்கட்டு வழியாக ஏறிச் செல்லும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.
மூச்சு வாங்கியபடி, வியர்வையில் நனைந்த நிலையில் அந்த குடும்பத்தினர் ஒவ்வொரு தளமாக கடந்து செல்வது காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து இணையவாசிகள் தங்கள் கண்டனங்களைப் பதிவுச் செய்து வருகின்றனர்.
குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இது ஒரு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஒரு நவீன அடுக்குமாடி குடியிருப்பில், அவசரகால மாற்று ஏற்பாடுகள் கூட இல்லாமல் அனைத்து மின்தூக்கிகளும் ஒரே நேரத்தில் பழுதடைந்தது எப்படி? என அடுக்குமாடி பராமரிப்புக் குழுவிடம் மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.



