கோலாலம்பூர், மே 9 – விமானக் குழுவினரின் உடல்நிலை சீராக இருந்ததோடு, விமானம் பயணிக்க பாதுகாப்பாக இருந்தது.
அதோடு, விமானத்தின் பராமரிப்பு நடைமுறைகள் வழக்கம் போல மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, சம்பவத்தின் போது வானிலை சீராகவே காணப்பட்டது.
பேராக், லூமுட்டில், அண்மையில் TLDM – அரச மலேசிய கடற்படைக்கு சொந்தமான இரு ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில், வெளியிடப்பட்டுள்ள தொடக்க கட்ட விசாரணை அறிக்கையில் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 23-ஆம் தேதி நிகழ்ந்த அந்த விபத்து குறித்து முழு விசாரணை மேற்கொள்ள நிறுவப்பட்ட விசாரணை ஆணையம், சம்பவத்தின் போது, அனைத்து பணியாளர்களும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளதாக, TLDM தெரிவித்துள்ளது.
அதே சமயம், சம்பந்தப்பட்ட ஹெலிகாப்டர்களும் பயணம் மேற்கொள்ள பாதுகாப்பான நிலையில் இருந்தன. அவை முறையான பராமரிப்பு பணிகளுக்கும் உட்படுத்தப்பட்டிருந்தன.
விபத்துக்குள்ளான, HOM AW139 ஹெலிகாப்டரில் ஒரு கருப்பு பெட்டி இருந்த வேளை ; 2003-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட Fennec ஹெலிகாப்டரில் அத்தகைய உபகரணம் எதுவும் இல்லை.
இம்மாதம் மூன்றாம் தேதி, HOM AW139 ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி, விசாரணை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டதும் அந்த அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் வாயிலாக, அந்த ஆணையத்தில் உள்ள ஒன்பது விசாரணை அதிகாரிகளுடன் இணைந்து, விமானப்படை தலைமையகத்தை சேர்ந்த அதிகாரிகளும், அவ்விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், அவ்விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை ஆணைய அதிகாரிகள் விசாரணையை தொடர்கின்றனர்.
குறிப்பாக, விபத்து மீதான முழு விசாரணையை அறிக்கையை தயார் செய்ய, அனைத்து கோணங்களிலும், மேலும் ஆழமான விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
அவ்விபத்து மீதான விசாரணை அறிக்கை இம்மாதம் 29-ஆம் தேதி முழுமைப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.