
பத்து காஜா சாலை விபத்தில் 3 தலைமுறை பெண்கள் பலி; போதைப்பொருள் மயக்கத்தில் வாகனம் ஓட்டிய ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்க Briged MIC வலியுறுத்தல்
பத்து காஜா, பிப்ரவரி-11,
பேராக், பத்து காஜாவில் நிகழ்ந்த சாலை விபத்தில், 3 தலைமுறையினரை இழந்த குடும்பத்திற்கு Briged MIC ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்கள், 34 வயது S. R. சரளா தேவி, 65 வயது G. சரஸ்பதி கோபால் மற்றும் 3 வயது சிறுமி S. சாஸ்திகா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தை மிகுந்த துயரமானதாகக் குறிப்பிட்ட Briged MIC தலைவர் அண்ட்ரூ டேவிட், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதே நேரத்தில், THC வகை போதைப்பொருள் தாக்கத்தில் வாகனமோட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரின் செயலையும் அவர் கண்டித்தார்.
கவனக்குறைவாலும் அலட்சியத்தாலும் 3 உயிர்கள் போகக் காரணமான அவர் மீது போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அண்ட்ரூ கோரிக்கை விடுத்துள்ளார்.
சாலைப் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு என்றும், அலட்சியம் அல்லது போதைப்பொருள் தாக்கத்தில் வாகனமோட்டுபவர்களுக்கு எவ்வித அனுசரணையும் காட்டக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு Tanjung Tualang சாலையில் நிகழ்ந்த விபத்தில், அம்மூவரும் பயணித்த Perodua Myvi கார், Toyota Hilux வாகானத்துடன் மோதியது.
அதில் பெரியவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளை, குழந்தை மருத்துவமனையில் உயிரிழந்தது.
27 வயது Toyota Hilux ஓட்டுநர் உடம்பிலும் கால் முட்டியிலும் காயமுற்றார்.



