Latestமலேசியா

பந்திங்கில் பரபரப்பு: எண்ணெய் நிலையம் அருகிலுள்ள சாக்கடையில் சிக்கிய 3 மீட்டர் நீள முதலை மீட்பு

பந்திங், ஜூன்-15-சிலாங்கூர், பந்திங்கில் எண்ணெய் நிலையம் ஒன்றின் அருகிலுள்ள சாக்கடையில், 3 மீட்டர் நீளமும் 200 கிலோ எடையும் கொண்ட இராட்சத முதலை ஒன்று சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​சுங்கை மங்கிஸ் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு அருகே இருக்கும் சாக்கடையில் பெரிய முதலை ஒன்று இருப்பதை பொது மக்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து நேற்று காலை 9 மணியளவில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டது.

​தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த பந்திங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 8 வீரர்கள் அடங்கிய குழுவினர், முதலையைப் பிடிக்கும் சாகசப் பணியில் ஈடுபட்டனர்.

முதலை, பிடிபடும் போது ஆக்ரோஷமாக சுழன்று போராடியதால் தீயணைப்பு வீரர்கள் அதை கட்டுப்படுத்த கடுமையாக முயன்றனர்.

​நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, காலை 10.48 மணியளவில் அந்த முதலை பாதுகாப்பாக இலாவகமாகப் பிடிக்கப்பட்டது.

இந்த மீட்புப் பணியில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

​பிடிபட்ட முதலை தற்போது பந்திங் தீயணைப்பு நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், அது விரைவில் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையான PERHILITAN-னிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!