
கோலாலம்பூர், ஆக 12 – ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருள் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிட்டதாக நினைத்த பெண்ணுக்கு, சிறிது நேரத்திலேயே டெலிவரி ஊழியரிடமிருந்து வந்த தகவல் அதிர்ச்சியுடன் சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Yane என்ற பெண்ணின் வீட்டிற்கு பார்சல் ஒன்றை விநியோகிக்க வந்த ஊழியர், அதனை வீட்டின் நுழைவாயிலுக்குள் வைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.
ஆனால், சிறிது தூரம் சென்ற பின்னர், குரங்கு ஒன்று அந்த வீட்டிலிருந்து பார்சலைத் தூக்கிக்கொண்டு வெளியே வருவதை அவர் கவனித்துள்ளார்.
பார்சல் காணாமல் போனதற்கு தன் மீது பழி வந்துவிடக்கூடாது என்பதற்காக, உடனடியாக Yane-ஐ தொடர்புகொண்ட அவர், பார்சலை வீட்டிற்குள் வைத்துவிட்டுத்தான் சென்றதாக விளக்கமளித்துள்ளார். அத்துடன், குரங்கு பார்சலை எடுத்துச் செல்லும் காணொளியையும் ஆதாரமாக அனுப்பியுள்ளார்.
டெலிவரி ஊழியரின் தகவலைப் பார்த்த Yane-க்கு அதிர்ச்சியைவிட சிரிப்புதான் அதிகமாக இருந்திருக்கிறது. காரணம், குரங்கு எடுத்துச் சென்ற பார்சலில் இருந்தது அவர் புதிதாக வாங்கிய ஐ ஷேடோ (eye shadow) அழகு சாதனப் பொருள்.
“இந்தக் குரங்கு… அதை ஒருமுறைகூட பயன்படுத்துவதற்குள் எடுத்துச் சென்றுவிட்டதே!” என தனது ஏமாற்றத்தை நகைச்சுவையாக சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார் Yane.
அதுமட்டுமின்றி, தனது பார்சல் இதுவரை திரும்பக் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அனுபவத்திற்குப் பிறகு, ஆன்லைனில் பொருட்களை வாங்குவோர் தங்களது பார்சல்களை அஞ்சல் பெட்டியிலோ அல்லது பாதுகாப்பான இடத்திலோ வைக்குமாறு டெலிவரி ஊழியர்களிடம் கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஒருபுறம் ஐ ஷேடோவுடன் தப்பிய ‘குறும்புக்கார குரங்கு’; மறுபுறம் தன்மீது பழி வந்துவிடக்கூடாது என்பதற்காக வீடியோ ஆதாரத்துடன் தகவல் கொடுத்த டெலிவரி ஊழியர் — இந்தச் சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பலரையும் சிரிக்க வைத்துள்ளது.



