
பினாங்கு, பட்டர்வொர்த்தைச் சேர்ந்த 21 வயதே ஆன இளம் சாதனையாளர் கவியமுதன் ரகுராமன், நாட்டின் மிக இளம் வயது ஆடை முத்திரை உரிமையாளர் (Youngest Clothing Brand Owner) என மலேசிய சாதனப் புத்தகத்தில் இடம் பிடித்து ஒட்டுமொத்த இளையோர் சமுதாயத்திற்கும் பெரும் முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
தமது 19 வயதில் ‘Kozzy Aesthetics’ ஆடை நிறுவனத்தின் வழி, மனமுடைந்த நிலையில் உள்ள பதின்ம வயது இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் வாழ்வியல் பண்புகளை இவர் கொண்டு சேர்த்து வருகிறார்.
தொழில்துறையில் மட்டுமின்றி கல்வியிலும் சிறந்து விளங்கும் கவியமுதன், தாசேக் குளுகோர் மெட்ரோ பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று, தொடர்ச்சியாக 5 பருவங்களிலும் Dean’s List பட்டியலில் இடம்பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
கவியமுதனின் அரிய கல்விச் சாதனையைப் பாராட்டி, கடந்த ஏப்ரல் மாதம் பினாங்கில் நடைபெற்ற ‘கல்வி யுத்தம்’ நிகழ்வின் போது உயரிய ‘அர்ஜுனா விருது’ மற்றும் ‘SPM சிறந்த மாணவர்’ விருது வழங்கி இவர் கௌரவிக்கப்பட்டார்.
ஃபேஷன் மற்றும் நேர்மறைச் சிந்தனைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் கவியமுதன், வரும் ஜூலை மாதத்தில் தனது வணிக முத்திரையின் 3-ஆவது வடிவமைப்புத் தொகுப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



