
ஜார்ஜ்டவுன், அக்-13–பிற மத வழிபாட்டுத் தலங்களில் மேற்கொள்ளப்படும் துப்புரவுப் பணிகளில் ஈடுபடுவதை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும். அதோடு மதச் சடங்குகளுடன் நேரடித் தொடர்புடைய நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும் என பினாங்கு முஃப்தி இணைப் பேராசிரியர் Datuk Dr Mohd Sukki Othman தெரிவித்துள்ளார்.
கோயில்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட பிற மத வழிபாட்டுத் தலங்களில் உள்ள சிலைகள், வழிபாட்டுப் பொருட்கள், பலிபீடங்கள் ஆகியவற்றைச் சுத்தம் செய்தல் அல்லது மதச் சடங்குகளுக்கான இடங்களைத் தயார் செய்தல் போன்ற பணிகளில் முஸ்லிம்கள் ஈடுபட அனுமதிக்கப்படாது. இத்தகைய செயல்கள் பிற மதச் சடங்குகளுக்கு நேரடியாக உதவுவதாக அமையும் என அவர் சுட்டிக் காட்டினார்.
எனினும், மதச் சடங்குகளுடன் தொடர்பில்லாத பொதுத் தூய்மைப் பணிகள் மற்றும் மனிதாபிமான உதவிகளில் முஸ்லிம்கள் பங்கேற்கலாம். பொதுக் கழிவுநீர்க் கால்வாய்களைச் சுத்தம் செய்தல், குடியிருப்புப் பகுதிகளில் குப்பைகளை அகற்றுதல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் போன்றவை அனுமதிக்கப்பட்ட சமூகச் சேவைகளில் அடங்கும் என Dr Mohd Sukki குறிப்பிட்டார்.
பினாங்கு, ஜார்ஜ்டவுனில் உள்ள முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலத்தில் முஸ்லிம்கள் உள்ளிட்டோர் சமூகத் தூய்மைப் பணியில் ஈடுபட்டதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து அவர் அவ்விளக்கத்தை வழங்கினார். பிற மதத்தினரை மதிப்பது என்பது அவர்களின் மதச் சடங்குகளில் பங்கேற்க வேண்டும் என்பதல்ல. அதேவேளை இஸ்லாம் பிற மதத்தினரை இழிவுபடுத்தவோ அவர்களிடம் பகைமை காட்டவோ கற்றுக் கொடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
மதங்களுக்கிடையிலான சமூகப் பணிகளை ஏற்பாடு செய்யும் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், அரசுத் துறைகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் முஸ்லிம்களின் மத உணர்வுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். பொது இடங்கள், பள்ளிகள், குடியிருப்புப் பகுதிகள் ஆகியவற்றைச் சுத்தம் செய்தல், தேவைப்படுவோருக்கு மதம், இனம் பாராமல் உதவுதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் சமூக ஒற்றுமையை வளர்க்கலாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.



