
மணிலா, மே-14-பிலிப்பின்ஸ் செனட் கட்டடத்திற்குள் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தலைநகர் மணிலாவில் உள்ள செனட் வளாகம் தற்போது இராணுவம் மற்றும் போலீஸின் தீவிரக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
நேற்றிரவு செனட் கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் கட்டடத்தின் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அங்கிருந்த உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
நல்ல வேளையாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தால் (ICC) தேடப்படும் செனட்டர் Ronald Dela Rosa செனட் கட்டடத்தில் பாதுகாப்பு கோரி தங்கியிருக்கும் நிலையிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
என்றாலும், அவரை கைதுச் செய்யும் முயற்சிக்கும் இந்தச் சம்பவத்திற்கும் தொடர்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் (Ferdinand Marcos Junior) உத்தரவிட்டுள்ளார்.
செனட் வளாகத்தில் பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து தற்போது தீவிர ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.



