
கோலாலாம்பூர், ஜூலை-25-கோலாம்பூர் மாநகரின் பிரபல சுற்றுலாத் தலமான பெட்டாலிங் ஸ்டிரீட்டின் தூய்மையின்மையைச் சுட்டிக்காட்டி வெளிநாட்டுச் சுற்றுப் பயணி ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவுக்கு பல முறை வந்துபோயுள்ள அப்பயணி, பெட்டாலிங் ஸ்டீரிட் பகுதியானது இந்நாட்டில் தனக்கு மிகவும் பிடித்தமான இடங்களில் ஒன்றெனவும், ஆனால் அண்மையில் அந்த Chinatown சாலையில் இரவில் நடக்கும் போது, தான் கண்ட காட்சிகள் பெருத்த ஏமாற்றத்தைத் தருவதாகவும் கூறியுள்ளார்.
X தளத்தில் பதிவேற்றப்பட்ட அந்த வீடியோவில், இரவு நேரத்தில் அப்பகுதியில் சேர்ந்திருக்கும் குப்பைகளையும் எலிகள் உலாவுவதையும் அச்சுற்றுப் பயணி படம் பிடித்துள்ளார்.
பிரபல சுற்றுலா தலம் என்பதோடு மட்டுமல்லாமல் தலைநகரின் முக்கியமான ஓரிடம் இப்படி அசுத்தமாக இருப்பதை எப்படி விட்டு வைத்தார்கள் என்பதே தமக்கு ஆச்சரியமாக இருப்பதாகவும் அவர் சொன்னார்.
இது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள இணையவாசிகள், இதுபோன்ற சுகாதாரமற்ற சூழல் நாட்டின் நற்பெயரையும் சுற்றுலாத் துறையையும் பாதிக்கும் எனக் கவலைத் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் தூய்மையைப் பேணவும், தொடர் கண்காணிப்பை மேற்கொள்ளவும் மாநகர மன்றமும் வியாபாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.



