
ஜோகூர் பாரு, செப்-7–ஜோகூர், ஸ்கூடாய், Taman Universitiயில் பெண் ஒருவரின் வாகனத்தை வழிமறித்து, அவர் மோட்டார் சைக்கிளில் மோதியதாகக் கூறி மிரட்டிப் பணம் பறிக்க முயன்றதாகக் கூறப்படும் 38 வயது நபர் கைது செய்யப்பட்டு நாளை வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அந்நபர் மீது ஏற்கனவே ஒன்பது குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குப் பதிவுகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. அச்சம்பவம் தொடர்பில் மற்றொரு நபரை காவல்துறையினர் தேடி வருவதாக வட ஜோகூர் பாரு மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் Radin Ramlan Radin Taha தெரிவித்தார்.
நேற்று காலை சுமார் 11.30 மணியளவில் சம்பந்தப்பட்ட 30 வயது பெண் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த அச்சந்தேக நபர் அவரைப் பின்தொடர்ந்துள்ளார். பின்னர், அந்தப் பெண் தனது மோட்டார் சைக்கிளில் மோதியதாகக் கூறி அவ்வாடவர் வாகனத்தை நிறுத்தச் செய்து, இழப்பீடு கோரியதாகவும் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் அங்கு வந்துள்ளார். அப்பெண் தமது வாகனத்தின் ஹார்னை ஒலிக்கச் செய்ததை அடுத்து அவ்விருவரும் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், பின்னர் கிடைத்த தகவலின் அடிப்படையில் 38 வயது நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து சில பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக Radin Ramlan கூறினார்.
மிரட்டிப் பணம் பறித்தல் தொடர்பான தண்டனைச் சட்டம் பிரிவு 384 மற்றும் சட்டவிரோதமாகத் தடுத்து நிறுத்துதல் தொடர்பான பிரிவு 341-ன் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது. தகவல் அறிந்த பொதுமக்கள் ஜோகூர் பாரு வடக்கு மாவட்டக் காவல்துறையை 07-5563122 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதனிடையே, அச்சம்பவம் தொடர்பான டாஷ்கேம் காணொளி முன்னதாக சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.



