
ஷா ஆலாம், நவம்பர் 2 – சிலர் அனுமதியின்றி அழைத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து, கிள்ளான், புக்கிட் கூடாவிலுள்ள (Bukit Kuda) போதைப்பொருள் மற்றும் மதுபான மறுவாழ்வு மையத்தில் நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிள்ளான் வடக்கு மாவட்டக் காவல் துறைத் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் ராம்சே எம்போல் (Ramsay Embol) கூறுகையில், கடந்த அக்டோபர் 28ஆம் தேதி மையத்தின் உரிமையாளர் புகார் அளித்ததாகத் தெரிவித்தார்.
அதன்படி, ஆண்களும் பெண்களும் அடங்கிய குழுவினர் மையத்துக்கு வந்து, நிர்வாகத்தின் அனுமதியின்றி சில தங்கியிருந்தவர்களை அழைத்துச் சென்றுள்ளனர். எத்தனை பேர் அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தனியாருக்குச் சொந்தமான அந்த மையத்தில் நடந்த சம்பவம், குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது 3,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இச்சம்பவம் குறித்து ஆதாரமற்ற தகவல்களைப் பரப்ப வேண்டாம் எனப் பொதுமக்களைக் கேட்டுக்கொண்ட போலீசார், தகவல் தெரிந்தவர்கள் கிள்ளான் வடக்கு மாவட்டக் காவல் தலைமையகத்தை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தினர்.



