
கோலாலம்பூர், செப்டம்பர் 10 — எதிர்வரும் மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுடன் (PH) அம்னோ இணைந்து செயல்படுவதை அம்னோ இளைஞரணி ஆதரிக்கவில்லை.
அம்னோ இளைஞரணி தலைவர் டத்தோ டாக்டர் முஹமட் அக்மல் சாலே (Datuk Dr Muhamad Akmal Saleh), அதற்குப் பதிலாக அடித்தட்டு ஆதரவை வலுப்படுத்தும் வகையில், மலாக்கா தேர்தலை உம்மா ஒற்றுமை திட்டத்தை முன்னெடுப்பதற்கான வாய்ப்பாக அம்னோ பயன்படுத்த வேண்டும் என்றார்.
இந்த அணுகுமுறை மூலம் பாரிசான் நேஷனல் (BN) மலாக்கா மாநில ஆட்சியை அதிகப் பெரும்பான்மையுடன் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஜோகூரில் இளைஞர் வாக்காளர்களில் கிட்டத்தட்ட 95 விழுக்காட்டினர் அம்னோவுக்கு வாக்களித்ததாகவும், நெகிரி செம்பிலானில் அதே பிரிவைச் சேர்ந்த 95 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகளை கட்சி பெற்றதாகவும் அக்மல் கூறினார்.
மலாக்காவிலும் இந்த வெற்றியை மீண்டும் ஏற்படுத்துவதற்கு, அம்னோ இளைஞரணி தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.



