
தாப்பா, ஆகஸ்ட்-17-வரவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலில் ம.இ.கா தனது ஒரே தொகுதியான காடேக் (Gadek) சட்டமன்றத் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ளப் போட்டியிடும் என, கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதே வேளையில், கூடுதல் தொகுதிகளில் போட்டியிடுவது குறித்தும் கட்சித் தலைமை தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
பேராக், தாப்பாவில் செய்தியாளர்களிடம் பேசிய அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன், வேட்பாளர்களின் பலம் மற்றும் வெற்றி வாய்ப்புகளின் அடிப்படையில் தகுதியான வேட்பாளர்களைக் கட்சித் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தேர்வு செய்து வருவதாகக் கூறினார்.
இதனிடையே, வாக்காளர்களை அடையாளம் காணும் தேர்தல் களப் பணிகளும், பிரசாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உள்ளூர் விவகாரங்களை ஆராயும் பணிகளும் ஏற்கனவே தொடங்கிவிட்டன என்றார் அவர்.
கடந்த 2021 மலாக்கா மாநிலத் தேர்தலில், பாரிசான் நேஷனல் கூட்டணியில் போட்டியிட்ட ம.இ.கா, 6 முனைப் போட்டியில் தனது வேட்பாளர் வி.பி. சண்முகம் மூலம் 559 வாக்குகள் பெரும்பான்மையில் காடேக் தொகுதியை வென்றது குறிப்பிடத்தக்கது.



