
மலாக்கா, ஆகஸ்ட்-16-வரவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலில் 15 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக, டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லியைத் தலைவராகக் கொண்ட பெர்சாமா கட்சி அறிவித்துள்ளது.
மக்களிடையே தங்களது வேட்பாளர்களையும் கட்சியையும் முன்கூட்டியே கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த ஆரம்பக்கட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புதிய அமைப்பாக களமிறங்கும் நிலையில், தொகுதி மக்களுடன் முன்கூட்டியே தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது அவசியம் என்று கட்சியின் இணைத் தலைவர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் தெரிவித்தார்.
இந்த 15 வேட்பாளர்களில் அதிக கவனத்தை ஈர்ப்பவர்
பெம்பான் (Bemban) தொகுதியில் போட்டியிடும் Dr சொலேஹின் சாலே (Solehin Salleh) ஆவார்.
இவர் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் Dr அக்மால் சாலேவின் உடன் பிறந்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
காடேக் (Gadek) தொகுதியில் B. Laveen, மாச்சாப் ஜெயாவில் B. Prashanth Kumar ஆகிய இந்திய வேட்பாளர்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இவ்வேளையில், எளிய பெரும்பான்மையுடன் மாநில ஆட்சியமைக்க போட்டியிடும் அனைத்து 15 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே இலக்கு என தெரிவித்த ரஃபிஸி , தேர்தல் அறிக்கை வேட்புமனுத் தாக்கலன்று வெளியிடப்படும் என்றார்.
அரசியல் கட்சி என்ற முறையில் பெர்சாமா சந்தித்த முதல் தேர்தலான ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில், போட்டியிட்ட அனைத்து 15 இடங்களிலும் அது தோல்விகண்டது.
பின்னர் நெகிரி செம்பிலான் தேர்தலில் அக்கட்சி போட்டியிடவில்லை.
இந்நிலையில், மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாகவே, மற்ற கட்சிகளை விட பெர்சாமா கட்சி தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 28 இடங்களைக் கொண்ட மலாக்கா சட்டமன்றத்திற்கு, ஆகத் தாமதமாக என்றால் அடுத்தாண்டு பிப்ரவரிக்குள்ளாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஆனால், அண்மைய ஜோகூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களில் பாரிசான் நேஷனல் அமோக வெற்றிப் பெற்றதை அடுத்து, அடுத்த மாதமே கூட சட்டமன்றம் கலைக்கப்படலாம் என, மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ Ab Rauf Yusoh கோடிகாட்டியுள்ளார்.



