
மும்பை, அக்.08-இந்தியத் திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75.
கோவாவில் தனது இல்லத்தில் நானா படேகர் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக மீட்கப்பட்ட அவர், அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவர்கள் அவருக்குத் தொடர்ந்து 45 நிமிடங்கள் வரை CPR சிகிச்சை அளித்து தீவிரமாக முயற்சி செய்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் அதிகாலை 5.20 மணியளவில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்தி மற்றும் மராத்தி திரையுலகில் பல தசாப்தங்களாக தனது அசாத்திய நடிப்பால் முத்திரை பதித்தவர் நானா படேகர். அவரது பல திரைப்படங்கள் அதற்குச் சான்று.
தமிழில் பாரதிராஜா இயக்கிய ‘பொம்மலாட்டம்’ படத்திலும், பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படத்திலும் அவர் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்.
மூன்று தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை குவித்துள்ள நானா படேகருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இவ்வேளையில் அவரது மறைவு இந்தியத் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



