
மாராங், ஆகஸ்ட்-26,திரங்கானு, மாராங் சிறைச்சாலையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் சக கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 3 கைதிகள் மீது கொலைக் குற்றச்சாட்டின் கீழ் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
நேற்று சக கைதிகளால் தாக்கப்பட்ட 38 வயது கைதி ஒருவர், Merchang சுகாதார மையத்தில் உயிரிழந்தார்.
பின்னர் சுல்தானா நூர் சாஹிரா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூறு ஆய்வில், கை கால்களால் தாக்கப்பட்டதில் பலத்த காயம் ஏற்பட்டு, அவரது மண்ணீரல் வெடித்ததே மரணத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
பழைய கடன் விவகாரம் மற்றும் உயிரிழந்தவர் மீதான அதிருப்தியே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக மாராங் மாவட்டப் போலீஸ் தெரிவித்தது.
அடையாளம் காணப்பட்டுள்ள 3 சந்தேக நபர்கள் மீதும் கொலை வழக்குப் பதிவுச் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



