
கோலாலம்பூர், ஏப்ரல்-25,
மலேசியாவில் தலைமறைவாக இருந்த ஜப்பானிய கொலைக் குற்றவாளி ஒருவரை, அந்நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் நடவடிக்கையை மலேசிய அதிகாரிகள் வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
மாறுவேடத்தில் தப்பிக்கும் அவரது முயற்சி தோல்வியில் முடிந்ததாக, புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ எம். குமார் கூறினார்.
2018-டிலிருந்து ஜப்பானில் தேடப்பட்டு வந்த இந்தக் கடும் குற்றவாளி, போலி அடையாளத்துடன் மலேசியாவில் பதுங்கியிருந்தபோது ஒரு சிறப்பு நடவடிக்கையின் மூலம் கைதுச் செய்யப்பட்டார்.
பிடிபடாமல் இருப்பதற்காக அவர் பல்வேறு ஆள்மாறாட்ட யுக்திகளைக் கையாண்டது விசாரணையில் தெரியவந்தது; குறிப்பாக மியன்மார் நாட்டவர் என்ற போர்வையில் உலா வந்துள்ளார்.
இருப்பினும், ஜப்பானிய அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்ட மலேசியப் போலீஸார் மற்றும் குடிநுழைவுத் துறையினர், அவரது நடமாட்டத்தைக் துல்லியமாகக் கண்டறிந்தனர்.
குறிப்பாக, கைவிரல் ரேகை மற்றும் முக அடையாளத்தை ஒப்பீட்டு பார்த்து சந்தேக நபரைக் கண்டுபிடித்தனர்; மரபணு பரிசோதனையும் அதனை உறுதிச் செய்தது.
அவ்வாடவர், ஏற்கனவே அபாயகர போதைப்பொருள் குற்றத்திற்காகவும், குடிநுழைவு விதிமீறலுக்காகவும் அலோர் ஸ்டார் நீதிமன்றத்தால் முறையே 10 மாதங்கள் மற்றும் 8 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவராவார்.



