
ஹரியானா, ஆக 7 -இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில், முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தந்தையின் இறுதிச் சடங்கில் நேரில் பங்கேற்காமல், மூன்று மகள்கள் வீடியோ கால் மூலம் சடங்கை பார்த்த சம்பவம் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
தந்தையின் உடல்நிலை மோசமடைந்தது குறித்து பல நாட்களுக்கு முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், யாரும் வந்து சந்திக்கவில்லை என முதியோர் இல்ல நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அவர் உயிரிழந்த பிறகு, மகள்கள் நேரில் வர முடியாது என்று கூறி, வீடியோ கால் மூலமாக இறுதிச் சடங்கைப் பார்த்தனர். மேலும், சடங்கு செலவுக்காக ரூ.5,100 மட்டும் இணையவழியில் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இறுதிச் சடங்குகளை முதியோர் இல்ல ஊழியர்களும், அப்பகுதி மக்களும் இணைந்து நடத்தினர். சடங்கு முடிந்த பிறகு அதன் வீடியோவையும் தங்களுக்கு அனுப்புமாறு மகள்கள் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், “பெற்றோருக்கான அன்பும் பொறுப்பும் இவ்வளவுதானா?” என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர்.



