
பேங்காக், ஆகஸ்ட்07- தாய்லாந்தில் அக்டோபர் 16 ஆம் தேதி முதல், விமானப் பயணிகளின் ‘செக்-இன்’ (checked) உடைமைகள் அதன் உரிமையாளரின் முன் அனுமதியின்றி பரிசோதிக்கப்படும்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக அவ்வாறு செய்யப்படவிருக்கிறது. இருப்பினும், அச்சோதனை கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டே மேற்கொள்ளப்படும் என தாய்லாந்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமான CAAT தெரிவித்துள்ளது.
விமானத்தின் சரக்குப் பிரிவுக்கு அனுப்பப்படும் உடைமைகளில், தடை செய்யப்பட்ட மற்றும் விமானப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் ஏதேனும் உள்ளனவா என்பதை X-ray ஸ்கேன் மூலம் கண்டறிந்தாலோ அல்லது அது குறித்து சந்தேகம் எழுந்தாலோ மட்டுமே CAAT அதிகாரிகள் அவற்றைச் சோதனையிடுவார்கள் என Bangkok Post செய்தி வெளியிட்டுள்ளது.
சந்தேகப்படும்படியான உடைமைகள், சிறப்பாக ஒதுக்கப்படும் தனி இடத்தில் வைத்துத் திறக்கப்படும்.
உடைமைகளைத் திறக்கும் நடவடிக்கைகள் முழுவதும் காணொளியில் பதிவு செய்யப்படும்.
அதோடு அந்நடவடிக்கையை பின் மறுஆய்வு செய்யும் வகையில் அனைத்து ஆதாரங்களும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்படும். சோதனை நடவடிக்கைகள் நிறைவடைந்ததும், அது குறித்து உடைமையின் உரிமையாளருக்குத் தெரிவிக்கப்படும்.
பாதுகாப்பு அதிகாரிகள் பைகளைச் சேதப்படுத்தாமல் திறக்க ஏதுவாக, அங்கீகரிக்கப்பட்ட TSA பூட்டு அமைப்புகளைக் கொண்ட பயணப் பெட்டிகளைப் பயன்படுத்துமாறு பயணிகளுக்கு CAAT பரிந்துரைத்துள்ளது.
அப்புதிய நடைமுறை அமலுக்கு வந்ததும் அது குறித்து ஏதேனும் கவலைகள் அல்லது புகார்கள் இருந்தால், பயணிகள் அவற்றை CAAT-இன் புகார் இணையதளம் வாயிலாகத் தெரிவிக்கலாம்.
சிங்கப்பூர், ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவின் பெரும்பாலான நாடுகளில் அப்பரிசோதனை முறை ஏற்கனவே அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது



