
கோலாலம்பூர், செப்டம்பர் 30 – பத்தாங் பெனார் (Batang Benar) மற்றும் (லாபு) Labu ரயில் நிலையங்களுக்கிடையே மின்கம்பி அறுந்ததால், பத்து மலை மற்றும் புலாவ் செபாங் (Batu Caves–Pulau Sebang) வழித்தடத்தில் ETS மற்றும் KTM Komuter ரயில் சேவைகள் இன்று காலை 6.24 மணி முதல் பாதிக்கப்பட்டுள்ளன.
25 கிலோவோல்ட் மின்கம்பி அறுந்ததால் ரயில் சேவைகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது. முதற்கட்ட ஆய்வில், விலங்கு ஒன்று மின்கம்பி மற்றும் நில இணைப்பு கம்பியை ஒரே நேரத்தில் தொட்டதால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாமென KTMB தெரிவித்துள்ளது.
இதனால் சில ரயில்கள் தாமதமாகவும், சில ரயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டுமுள்ளன. சிரம்பான் நிலையம் வரை ரயிலில் சென்று, அங்கிருந்து பேருந்து மூலம் பயணத்தைத் தொடர பயணிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் முடிந்தவரை மாற்றுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு KTMB கேட்டுக்கொண்டுள்ளது. பயணத்தைத் தொடர வேண்டாமென முடிவு செய்யும் பயணிகளுக்கு விதிமுறைகளுக்கேற்ப முழுக் கட்டணமும் திருப்பி வழங்கப்படும். இந்நிலையில் சேவையை விரைவில் சீரமைக்கும் பணியில் தொழில்நுட்பக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்



