
ரொம்பின், ஆகஸ்ட்-15,பஹாங், ரொம்பினில் இன்று அதிகாலை வீட்டொன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கணவன், மனைவி, மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலுமிரு பிள்ளைகள் உயிர் தப்பினர்.
அதிகாலையில் பெறப்பட்ட அவசர அழைப்பைத் தொடர்ந்து, ரொம்பின் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உடனடியாகச் சம்பவ இடம் விரைந்தனர்.
அவர்கள் அங்கு சென்றடைந்தபோது, வீட்டின் பெரும் பகுதி தீயில் கருகி எரிந்து கொண்டிருந்தது.
தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், தம்பதியர் மற்றும் அவர்களது பிள்ளை என மூவரின் சடலங்கள் வீட்டிற்குள்ளிலிருந்து மீட்கப்பட்டன.
உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஒரு பக்கத்து வீடும் 70 விழுக்காடு தீயில் அழிந்தது; எனினும் அதிலிருந்த 6 பேரும் காயமின்றி உயிர் பிழைத்தனர்.
தீ விபத்துக்கான துல்லியமான காரணம் மற்றும் சேத விவரங்கள் குறித்து தீயணைப்புத் துறையின் தடயவியல் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்



