Latestமலேசியா

லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடத்திற்கு கல்வி அமைச்சர் ஃபட்லீனா சிடேக் அடிக்கல் நாட்டினார்

லாபு, ஜூலை-14-நெகிரி செம்பிலான், MVV City-யில் அமையவுள்ள லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடத்திற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கல்வி அமைச்சர் ஃபட்லீனா சிடேக் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்த இந்நிகழ்வு, இவ்வட்டாரத்தில் கல்வி உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

Matrix Concepts Holdings Berhad மற்றும் நெகிரி செம்பிலான் மாநில அரசு ஆகியவற்றின் கூட்டு முயற்சியில், சுமார் 9 மில்லியன் ரிங்கிட் செலவில் இப்புதிய பள்ளி வளாகம் நவீன வசதிகளுடன் 12 மாதங்களில் கட்டி முடிக்கப்படவுள்ளது.

இந்த மொத்தச் செலவில் 50 விழுக்காட்டை Matrix நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ள வேளையில், எஞ்சிய தொகை பள்ளி வாரியம் மற்றும் பொது மக்களின் பங்களிப்பு மூலம் திரட்டப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் ஃபட்லீனா, நாட்டின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதில் அரசாங்கம், தனியார் துறை மற்றும் உள்ளூர் சமூகம் ஆகிய முத்தரப்பும் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தைப் பாராட்டினார்.

இந்த லாபு தோட்டம் பிரிவுய் 4 தமிழ்ப்பள்ளியின் கட்டட போராட்டம் ஒரு வெற்றிக் கதை என்றும் அவர் வருணித்தார்.

12 வகுப்பறைகள், கணினி மற்றும் அறிவியல் அறைகள், பாலர் பள்ளி மற்றும் நவீனக் கால்பந்துத் திடல் ஆகிய வசதிகளுடன் அமையவுள்ள இப்புதிய வளாகம், மாணவர்களுக்குச் சிறந்த கற்றல் சூழலை வழங்கும் என அவர் உறுதியளித்தார்.

கல்வி விஷயத்தில் அனைத்து இனத்தாரின் அடிப்படை உரிமைகளும் மடானி அரசாங்கத்தின் கீழ் கட்டிக் காக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கல்வி துணையமைச்சர் வோங் கா வோ, புதிய இடத்தில் கட்டடம் எழுப்பப்பட்டதும், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.

போதிய நன்கொடைகள் திரட்டப்பட்டு, அனைத்து அனுமதிகளும் கிடைத்திருப்பது குறித்து, இத்திட்டத்திற்கு முக்கியத் தூணாக விளங்கிய நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழு உறுப்பினர் அருள் குமார் ஜம்புநாதன் வணக்கம் மலேசியாவிடம் மகிழ்ச்சித் தெரிவித்தார்.

தற்போது 20 மாணவர்களுடன் இயங்கி வரும் இப்பள்ளி, புதிய மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் எதிர்காலத்தில் இப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான தமிழ் மாணவர்களின் கல்வித் தேவையைப் பூர்த்திச் செய்யும் என்றும் அருள் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இவ்வேளையில், இந்த 10 கால போராட்டம் குறித்து விவரித்த, LPS எனப்படும் பள்ளி மேலாளர் வாரியத்தின் தலைவர் நவஜீவன் ராமசாமி, இப்பள்ளியின் புதிய கட்டடக் கனவு நனவாக உறுதுணையாக இருந்த மாநில அரசு, கல்வி அமைச்சு, Matrix நிறுவனம் மற்றும் நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

கல்வித் துறை, தொழில்துறை மற்றும் உள்ளூர் சமூகத்தின் அரிய கூட்டு உழைப்புக்குச் சான்றாக விளங்கும் லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளியின் இந்த புதிய கட்டடத் தொடக்கம், இப்பகுதி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!