
கிளானா ஜெயா, ஜூலை-5-உள்நாட்டு கால்பந்து களத்தில் புதிய வரலாறு படைத்திருக்கிறது பினாங்கு இந்தியன் எஃப்.சி அணி.
16 வயதுக்குக் கீழ்பட்ட பெண்களுக்காக, மலேசியக் கால்பந்து சங்கமான FAM ஏற்பாட்டில் நடைபெற்ற லீகா புத்ரி கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்தில், பெர்லீமா யுனைடெட் எஃப்.சி அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, பினாங்கு இந்தியன் எஃப்.சி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
ஜூன் 28-ஆம் தேதி கிளானா ஜெயா, PKNS அரங்கில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான இறுதியாட்டத்தில், இரு அணிகளும் சமபலத்துடன் மோதின.
கூடுதல் நேரத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய பினாங்கு இந்தியன் எஃப்.சி, வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
இந்த வெற்றியின் மூலம் பினாங்கு இந்தியன் எஃப்.சி அணிக்கு சாம்பியன் கிண்ணத்துடன் 5,000 வெள்ளி ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.
இரண்டாம் இடத்தைப் பிடித்த பெர்லீமா யுனைடெட் எஃப்.சி அணிக்கு 3,000 வெள்ளி பரிசாக வழங்கப்பட்டது.
இத்தொடரின் சிறந்த வீராங்கனையாக, மொத்தம் 15 கோல்களை அடித்து அசத்திய பினாங்கு இந்தியன் எஃப்.சி வீராங்கனை தானு ஸ்ரீ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த பினாங்கு இந்தியன் எஃப்சி தலைவர் ஸ்ரீ சங்கர், இது ஐந்தாண்டு கால கடுமையான உழைப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என பெருமிதம் கொண்டார்.
FAM-மின் இந்த முயற்சி, வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.
வரலாற்றுச் சாதனை படைத்த பினாங்கு இந்தியன் எஃப்சி வீராங்கனைகளுக்கும், பயிற்சியாளர் லியோனார்ட் லாரன்ஸ் மற்றும் குழுவினருக்கும் விளையாட்டு இரசிகர்களின் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன



