
வாஷிங்டன், ஜூன்-22-லெபனானில் செயல்பட்டு வரும் ஹெஸ்பொல்லா ஆயுதக் குழுவினர் தங்களின் ஆக்ரோஷமான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தாவிட்டால், ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்தும் என அதிபர் டோனல்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாட்டு உயர் அதிகாரிகள் பங்கேற்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதிப் பேச்சுவார்த்தை, சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் ஏரி அருகே உள்ள விடுதியில் தொடங்கியுள்ளது.
கட்டார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்துடன், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் முன்னிலையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இத்தகைய இக்கட்டான சூழலில், டோனல்ட் ட்ரம்ப் தனது Truth Social தளத்தில் ஈரானுக்குப் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
லெபனானில் ஈரான் நிதியுதவி வழங்கும் ஹெஸ்பொல்லா குழுவினர் தொடர்ந்து பிரச்னைகளை ஏற்படுத்தி வருவதாகவும், இதனை ஈரான் உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தவறும் பட்சத்தில், கடந்த வாரம் நடத்தியதை விட மிகக் கொடூரமான தாக்குதலை ஈரான் சந்திக்க நேரிடும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
கடந்த வாரம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை, லெபனானில் நீடிக்கும் மோதல்கள் தடம் புரளச் செய்யும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக அனைத்துலக அரசியல் வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.



