Latestமலேசியா

வாயைப் பிளக்க வைக்கும் நாசி லெமாக் விலை

கோலாலம்பூர், ஜூலை-1-உள்நாட்டு மக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் மலேசியாவின் பிரசித்தி பெற்ற ஓர் உணவாக இருப்பது ‘நாசி லெமாக்’ (Nasi Lemak) என்றால் அது மிகையாகாது. நம்மில் பலருக்கு நாசி லெமாக்தான் பிரதான காலை உணவாகவும் இருக்கிறது என்று தாராளமாகக் கூறலாம்.

அத்தகைய ஒரு விருப்பமான உணவு தற்போது கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் மலிவான விலையில் கிடைத்த நாசி லெமாக்கின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பலரின் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

அவ்வகையில் ஜோகூர் மாநிலத்தில் உள்ள கடையொன்று நாசி லெமாக்கை மிக அதிக விலைக்கு விற்பது குறித்து பெண் ஒருவர் அதிருப்தி தெரிவித்து அண்மையில் சமூக ஊடகங்களில் அதைப் பற்றி பகிர்ந்துள்ளார்.

இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சம்பந்தப்பட்ட கடையில் விற்கப்படும் பலதரப்பட்ட நாசி லெமாக்கின் விலைப் பட்டியலைப் புகைப்படம் எடுத்து அப்பெண் சமூக ஊடகத்தில் பதிவேற்றியுள்ளார்.

அப்பட்டியலின் படி மிகக் குறைந்த விலையிலான நாசி லெமாக் 4.50 என விற்கப்படுகிறது. நாசி லெமாக்கில் வெவ்வேறு உணவு வகைகளைச் சேர்த்துக் கொண்டால் அதற்குத் தனியாக வேறு விலை விதிக்கப்படுகிறது. அக்கடையில் Nasi Lemak Special எனக் கூறி அது மிக அதிகமாக 25 ரிங்கிட்டுக்கு விற்கப்படுகிறது.

இவ்வேளையில், அப்பதிவேற்றம் பலரது கவனத்தை ஈர்த்து பேசும் பொருளாக மாறியுள்ளது. அது குறித்து கருத்து தெரிவித்துள்ள இணையவாசிகள் சிலர், அவ்விலை சாதாரணமானதுதான் என்றும், அது ஒரு பிரச்னையே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சிலரோ, வாடிக்கையாளர்கள் சிலவற்றை ‘இயல்பானதாக’ ஏற்றுக் கொள்ளவோ ​​அல்லது விலையை உயர்த்துவதற்கு விற்பனையாளர்களுக்கு வாய்ப்பளிக்கவோ கூடாது என கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, பணவீக்கத்தை அதிகரிப்பதாக இதற்கு முன் கூறப்பட்ட ஜோகூர் பகுதிக்குச் செல்லும் சிங்கப்பூர் மக்களே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்று இணையவாசி ஒருவர் தனது மனக்குமுறலை வெளியிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!