
கோலாலம்பூர், நவ-04-முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக், எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கும் வகையில், அவருக்கு விதிக்கப்பட்ட 5 கோடி ரிங்கிட் அபராதத்தை இன்று செலுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் நஜிப்பின் பிரதிநிதி ஒருவர் அத்தொகையைச் செலுத்துவார் என செய்தியொன்று கூறுகிறது.
கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் நிபந்தனையுடனான அரச மன்னிப்பை வழங்கியிருந்தார். அதன் அடிப்படையில், நஜிப் எஞ்சிய சிறைத் தண்டனையை 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதி அளிக்கப்பட்டது. எனினும் அவர் 5 கோடி ரிங்கிட் அபராதம் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
73 வயதான நஜிப், SRC International Sdn Bhd நிறுவனத்துக்குச் சொந்தமான 4.2 கோடி ரிங்கிட் நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட ஏழு குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2020ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் 21 கோடி ரிங்கிட் அபராதத்தையும் விதித்தது.



