
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 22 – திடீர் வெள்ளத்தில் கார் சேதமடைந்தாலோ அல்லது வெள்ளத்தில் மூழ்கியிருந்தாலோ, அது உள்ளாட்சி மன்றத்தின் (PBT) அலட்சியத்தால் ஏற்பட்டது என்பதை நிரூபிக்க முடிந்தால், வாகன உரிமையாளர்கள் அந்த உள்ளாட்சி மன்றத்திடம் இழப்பீடு கோரலாம்.
மலேசிய நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பின் (FOMCA) தலைமை செயல்பாட்டு அதிகாரி நூர் அசிகின் அமினுடின் (Nur Asyikin Aminuddin) கூறுகையில், வெள்ளம் ஏற்பட்டது என்பதற்காக மட்டும் உள்ளாட்சி மன்றம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற சட்டம் இல்லை என்றார்.
அவர் கூறியதாவது, கடும் மழை அல்லது காலநிலை மாற்றம் போன்ற இயற்கை காரணங்களாலும் வெள்ளம் ஏற்படலாம். ஆனால், வடிகால்கள் மற்றும் கால்வாய்களை சுத்தம் செய்யாமல் விட்டது, நீரேற்ற அமைப்பை முறையாக பராமரிக்காதது அல்லது பராமரிக்கப்படாத மரம் விழுந்து கார் சேதமடைந்தது போன்ற உள்ளாட்சி மன்றத்தின் அலட்சியத்தால் சேதம் ஏற்பட்டது என்பதை நிரூபிக்க முடிந்தால், இழப்பீடு கேட்கலாம்.
இழப்பீடு கோர விரும்புவோர், சம்பவ இடத்தின் புகைப்படங்கள், காவல் துறை அறிக்கை, தேவைப்பட்டால் தீயணைப்புத் துறை அறிக்கை, வாகனத்தை பழுதுபார்த்த ரசீதுகள் மற்றும் பிற ஆதாரங்களை சேகரித்து வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும், வெள்ளம், புயல், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் ஏற்படும் சேதங்களுக்கு பாதுகாப்பு பெற, வாகன உரிமையாளர்கள் தங்களின் வாகனக் காப்புறுதியில் “Special Perils” என்ற கூடுதல் காப்புறுதியை சேர்த்துக்கொள்வது சிறந்தது என்றும் அவர் தெரிவித்தார்.



