Latestமலேசியா

பினாங்கு ஆடவரிடமிருந்து சுமார் 1.3 மில்லியன் பண மோசடி ; இந்திய தொழிலதிபர் மீது குற்றச்சாட்டு

பட்டர்வொர்த், மார்ச் 27 – முறையான உரிமம் இன்றி முன்பணத்தை பெற்றது, நபர் ஒருவரை ஏமாற்றி இல்லாத முதலீட்டு திட்டத்தில் இணைய தூண்டியது என சுமார் 13 லட்சம் ரிங்கிட் இழப்பை ஏற்படுத்தியது தொடர்பில், முனைவர் பட்டம் பெற்ற தொழிலதிபர் ஒருவருக்கு எதிராக, இன்று பட்டர்வொர்த் மாஜிஸ்திரேட் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றங்களில், ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

எனினும், 57 வயது ஜி.சந்திரசேகரன் எனும் அவ்வாடவர் தமக்கு எதிரான அந்த குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார்.

முறையான அனுமதி இன்றி, 53 வயது ஆடவரிடமிருந்து, எட்டு லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட்டை பெற்றதாக, சந்திரசேகருக்கு எதிராக செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

2017-ஆம் ஆண்டு, டிசம்பர் 28-ஆம் தேதி, காலை மணி 10.33 வாக்கில், தாமான் தெராதாய் இண்டா எனுமிடத்தில் அவர் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து கோடி ரிங்கிட்டிற்கு மேற்போகாத அபராதம் அல்லது பத்தாண்டுகளுக்கு மேற்போகாத சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

அதே சமயம், இல்லாத முதலீட்டு திட்டத்தில் இணையுமாறு நபர் ஒருவரை ஏமாற்றியதாக, சந்திரசேகருக்கு எதிராக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

2018-ஆம் ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதிக்கும், மார்ச் ஐந்தாம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் அக்குற்றங்களை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அதனால், நபர் ஒருவர் நான்கு லட்சத்து 75 ரிங்கிட்டை இழந்ததாக கூறப்படுகிறது.

அக்குற்றங்கள் நிரூபனமானால், ஓர் ஆண்டு முதல் பத்து ஆண்டுகள் வரையிலான சிறையிடன், பிரம்படியும், அபராதமும் விதிக்கப்படலாம்.

67 ஆயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும், தனிநபர் உத்தரவாததின் பேரிலும் சந்திரசேகரன் இன்று விடுவிக்கப்பட்ட வேளை ; இவ்வழக்கு விசாரணை ஏப்ரல் 26-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!