
ஜோகூர் பாரு, ஜூன்-8-இன்று காலை தம்போய், (Dwi Aliff Avenue,)
அடுக்குமாடி குடியிருப்பு பகுதியிலுள்ள இடத்திலிருந்து கீழே விழுந்ததில் எட்டு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.
அவரது சகோதரர் என நம்பப்படும் 10 வயது சிறுவன் இன்னும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
காலை மணி 7.59 க்கு நடந்த இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட இருவரும் குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்திலிருந்து, அடுக்குமாடி குடியிருப்பின் நீச்சல் குளப் பகுதிக்கு அருகிலுள்ள கீழ் தளத்தில் விழுந்ததாக நம்பப்படுகிறது.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் காயங்களால் சிறுமி உயிரிழந்ததாகவும், சிறுவன் சுல்தானா அமினா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை வட ஜோகூர் பாரு போலீஸ் தலைவர் உதவி ஆணையர் ராடின் ரம்லான் ராடின் தாஹா ( Radin Ramlan Radin Taha ) உறுதிப்படுத்தினார்.
தானும் தனது குடும்பத்தினரும் நீச்சல் குளத்திற்கு அருகில் இருந்தபோது ஒரு பெரிய சத்தம் கேட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசி ஒருவர் கூறினார்.
மக்கள் உதவிக்காகக் கூச்சலிட்டு அவசர சேவைகளை அழைப்பதற்கு முன்பு, அந்தச் சிறுமி கீழே விழுந்து அசைவற்று கிடந்ததாக கூறப்பட்டது.
சில வினாடிகளுக்குப் பிறகு, மற்றொரு பெரிய சத்தம் கேட்டதாகவும், அப்போது அந்தச் சிறுவன் காயங்களுடன் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டான்.
அவசர சேவைகள் வருவதற்குள், பல குடியிருப்பாளர்கள் உதவி செய்ய விரைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.



