Latestமலேசியா

அதிகார துஷ்பிரயோகம்: ஃபெல்டா முன்னாள் தலைமை நிர்வாகிக்கு 5 நாட்கள் தடுப்புக் காவல்

புத்ராஜெயா, செப்- 7-தலைநகரில் திட்டமொன்றுக்காக மேம்பாட்டாளரை நியமித்தது, ஃபெல்டாவுக்குச் சொந்தமான நிலத்தை விற்பனை செய்தது ஆகியவற்றில் அதிகார துஷ்பிரயோகம் நிகழ்ந்ததாகக் கூறப்படுவது தொடர்பில் ஃபெல்டா முன்னாள் தலைமை இயக்குநர் ஒருவர் ஐந்து நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் MACC முன்வைத்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம், 60 வயதுடைய அந்த முன்னாள் தலைமை இயக்குனரை இன்று முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை தடுத்து வைக்க அனுமதி வழங்கியது. அவரும் மற்றொரு நபரும் நேற்று MACC தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்கச் சென்ற போது மாலை சுமார் 4 மணியளவில் கைது செய்யப்பட்டனர். அவ்விவகாரம் 2009-ஆம் ஆண்டு MACC சட்டத்தின் பிரிவு 16-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, அம்முறைகேட்டில் தொடர்புடைய மற்றொரு நபர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நபரைக் காவலில் வைப்பதற்கான விண்ணப்பத்தை அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையிலேயே MACC மேற்கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஃபெல்டா மற்றும் அதன் துணை நிறுவனமான Felda Investment Corporation Sdn Bhd (FIC) தொடர்பாக ஏழு விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளதாக முன்னதாக MACC தலைமை ஆணையர் Datuk Seri Abdul Halim Aman தெரிவித்திருந்தார். இவ்வேளையில் “Op Fella” எனும் சிறப்பு நடவடிக்கையின் கீழ், 2010 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் செய்யப்பட்ட முதலீடுகள், சொத்து கையகப்படுத்தல்கள் தொடர்பான நிதி முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!