Latestமலேசியா

அமெரிக்காவில் கணையப் புற்றுநோய் ஆய்வை வழிநடத்தும் மலேசிய மருத்துவர் தேவலிங்கம்

கோலாலம்பூர், ஏப்ரல்-24 – மருத்துவ உலகில் மலேசியாவுக்கு மற்றுமொரு மகுடமாக,அமெரிக்காவின் Northwestern பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மலேசிய மருத்துவர் Dr தேவலிங்கம் மகாலிங்கம், கணையப் புற்றுநோய் அதாவது pancreatic cancer சிகிச்சையில் புரட்சிகரமான ஆய்வை வழிநடத்தியுள்ளார்.

இவரின் இந்தச் சாதனையை கோலாலம்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அதன் முகநூலில் பாராட்டி கௌரவித்துள்ளது.

மிகவும் ஆபத்தான மற்றும் குணப்படுத்துவதற்கு கடினமான ‘மெட்டாஸ்டேடிக்’ (Metastatic) வகை கணையப் புற்றுநோயாளிகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதில், Elraglusib எனப்படும் புதிய மருந்தினை, வழக்கமான கீமோதெரபி சிகிச்சையுடன் இணைத்து வழங்கியபோது வியக்கத்தக்க முடிவுகள் கிடைத்துள்ளன.

அதாவது மரண அபாயம் 38 விழுக்காடு குறைந்துள்ளது.

ஓராண்டு உயிர்வாழ்வு விகிதமும் 22-லிருந்து 44 விழுக்காடாக, அதாவது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

சுருக்கமாகச் சொன்னால், கீமோதெரபி மட்டும் எடுத்துக்கொண்டவர்களை விட, இந்த புதிய முறையை பின்பற்றியவர்களின் சராசரி ஆயுட்காலம் கணிசமாக அதிகரித்துள்ளது.

வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, புற்றுநோய் சிகிச்சையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இதன் மூன்றாம் கட்ட ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மலேசிய மண்ணில் பிறந்து, இன்று உலகளாவிய மருத்துவப் புரட்சிக்குத் தலைமை தாங்கும் Dr தேவலிங்கத்திற்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!