
பாரீஸ், ஜூன்-25-மத்திய ஆப்பிரிக்க நாடான கோங்கோ ஜனநாயகக் குடியரசில் தீவிரமாகப் பரவி வரும் கொடிய ‘இபோலா’ (Ebola) வைரஸ் தொற்று, தற்போது ஆப்பிரிக்கக் கண்டத்தைத் தாண்டி முதல்முறையாக ஐரோப்பிய நாடான பிரான்ஸிலும் கண்டறியப்பட்டுள்ளது.
கோங்கோவில் உள்ளூர் மருத்துவக் குழுக்களுடன் இணைந்து பணியாற்றிவிட்டு, அண்மையில் பாரீஸ் திரும்பிய பிரெஞ்சு மருத்துவர் ஒருவருக்கு இந்த இபோலா பாதிப்பு இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
விமானப் பயணத்தின் போதே அவரது உடல்நிலை இலேசாக பாதிக்கப்பட்டதால், அவர் பாரீஸ் விமான நிலையத்தில் தரையிறங்கிய உடனே தனிமைப்படுத்தப்பட்டு, அதிநவீன தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
அவருடன் பயணித்த சக பயணிகள் மற்றும் நெருங்கிய தொடர்பில் இருந்த 5 பேர் கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கோங்கோவில் தற்போதைய இபோலா அலையை ஏற்படுத்தியிருக்கும் Bundibugyo இரக வைரஸுக்கு இன்னும் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது பிரத்யேக மருந்துகளோ இல்லை.
இது கவலையளிக்கும் விஷயமாக இருந்தாலும், இந்த வைரஸ் எளிதில் பரவாது என்பதால் உலகளாவிய ரீதியில் இதனால் பெரிய ஆபத்து எதுவும் இல்லை என்றும், பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் உலக சுகாதார நிறுவனமான WHO தெரிவித்துள்ளது.



