Latestமலேசியா

இணைய வேலை வாய்ப்பு மோசடி; Whatsapp விளம்பரத்தை நம்பி 13K ரிங்கிட்டை பறிகொடுத்த ஆடவர்

குவாலா திரங்கானு, ஏப்ரல்-29, நோன்புப் பெருநாள் செலவுகளைச் சமாளிக்க கூடுதலாக குறைந்தது 300 ரிங்கிட் வருமானம் தேடிய ஆடவர், கடைசியில் வேலை வாய்ப்பு மோசடியில் சிக்கி 13,460 ரிங்கிட்டைப் பறிகொடுத்துள்ளார்.

சொந்தத் தொழில் செய்யும் 50 வயது அந்நபர், அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து வந்த Whatsapp விளம்பரத்தால் கவரப்பட்டுள்ளார்.

You Tube வீடியோக்களை like மற்றும் Subscribe செய்தாலே நல்ல வருமானம் கிடைக்கும் என அந்த whatsapp விளம்பரம் அவரை நம்ப வைத்திருக்கிறது.

தொடக்கத்தில் தமக்குக் கொடுக்கப்பட்ட 3 பணிகளை செய்து முடித்ததில், ஒவ்வொன்றுக்கும் ஊதியமாக தலா 15 ரிங்கிட்டை அவர் பெற்றுள்ளார்.

அந்த சந்தோசத்தில் அடுத்தடுத்தப் பணிகளையும் ஆர்வத்தோடு அவர் செய்துள்ளார்.

ஆனால், அப்படி செய்யும் முன் குறிப்பிட்டத் தொகையை முன்பணமாக அவர் செலுத்த வேண்டும்; அப்போது தான் அதை விட அதிக இலாபம் கிடைக்கும் என்ற நிபந்தனை இருந்திருக்கிறது.

ஏற்கனவே கூறியபடி ஊதியம் கிடைத்து வந்ததால் எந்த சந்தேகமும் வராமல் அவர் தொடர்ந்து அவ்வேலையைச் செய்திருக்கிறார்.

இப்படியே முன்பணமாக ஆயிரக்கணக்கில் செலுத்தி வந்தவர் ஒரு கட்டத்தில், தான் மோசடிக்கு ஆளாகியிருப்பதை உணர்ந்துள்ளார்.

அவர் நட்டமடைந்த தொகை 13,460 ரிங்கிட்டாகும் என திரங்கானு போலீஸ் தலைவர் Datuk Mazli Mazlan கூறினார்.

எனவே, இணையத்தில் சுலபமான வேலை வாய்ப்பு எனக் கூறிக் கொண்டு வரும் இது போன்ற விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!