
வாஷிங்டன், ஜூன்-20 – அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற விண்வெளி அருங்காட்சியகத்தில் முதன்முறையாக ஒரு இந்தியச் சேலை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
விண்வெளி வரலாற்றில் முத்திரை பதித்த அந்தச் சேலையின் பின்னணி என்ன?
”எதற்காக இந்தச் சேலை இங்கு வைக்கப்பட்டுள்ளது?
இது யாருடைய சேலை?”…
ஆம், இது இந்தியாவின் இஸ்ரோ (ISRO) விஞ்ஞானியும், மங்கள்யான் விண்கலத் திட்டத்தின் துணை செயல்பாட்டு இயக்குநருமான நந்தினி ஹரிநாத்தின் (Nandini Harinath) சேலையாகும்.
கடந்த 2013-ஆம் ஆண்டு, மங்கள்யான் விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையைத் தாண்டி செவ்வாய் கிரகத்தை நோக்கித் தன் 300 நாள் பயணத்தைத் தொடங்கிய அந்த மிக முக்கியமான நாளில், நந்தினி ஹரிநாத் இந்தச் சிவப்பு மற்றும் நீல நிற பட்டுச்சேலையைத் தான் அணிந்திருந்தார்.
இந்த விண்கலக் கட்டுப்பாட்டு அறையில் இருந்த பெண் விஞ்ஞானிகளின் புடவை அணிந்த தோற்றம், இந்தியாவின் விண்வெளி சாதனைக்கும், கலாச்சார அடையாளத்திற்கும் உலகளாவிய அங்கீகாரமாக மாறியது.
இந்நிலையில், விண்வெளித் துறையில் பெண்களின் பங்களிப்பைக் கொண்டாடும் விதமாக, Smithsonian’s National Air and Space Museum இந்தச் சேலையைத் தனது விண்வெளிப் பிரிவில் காட்சிப்படுத்தியுள்ளது.
ஒரு ராக்கெட் விஞ்ஞானியின் சாதனையைப் பறைசாற்றும் இந்தச் சேலை, தற்போது அமெரிக்க மண்ணில் இந்தியப் பெருமையின் அடையாளமாகத் திகழ்கிறது.



