Latestமலேசியா

உலகக் கிண்ண கால்பந்து சூதாட்ட மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 34 பேர் கைது

கோலாலம்பூர், ஜூலை-6-செந்தூல், Taman Wahyuவில் உலகக் கிண்ண கால்பந்து சூதாட்ட அழைப்பு மையமாகச் செயல்பட்டு வந்த உரிமம் இல்லாத பொழுதுபோக்கு வளாகத்தில் நடத்தட்ட சோதனையில் 34 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் 33 பேர் வெளிநாட்டினர். கைதானவர்கள் 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களில் 28 பேர் சீன நாட்டினர். மூவர் மியன்மார் ஆண்கள், ஒரு தென் கொரிய ஆண், ஒரு தாய்லாந்துப் பெண் மற்றும் ஒரு மலேசியப் பெண் ஆவார்.

உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிக்கான இணையவழிப் பந்தயத்தை நிர்வகிக்கவும், அதன் நடவடிக்கைகளை ஒழுங்கிணைக்கவும், விளம்பரப்படுத்தவும் அந்த வளாகம் பயன்படுத்தப்பட்டது ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் Datuk Fadil Marsus கூறினார்.

சம்பந்தப்பட்ட இடம் கடந்த மாத மத்தியில் இருந்து, தினமும் மாலை 5 மணி முதல் அதிகாலை 3 மணி வரை இயங்கி வந்ததாகவும் நம்பப்படுகிறது. சோதனை நடவடிக்கையில் 15 கைபேசிகள், இரண்டு மடிக்கணினிகள், 60 ரிங்கிட் ரொக்கம் மற்றும் பல்வேறு இசை உபகரணங்களையும் காவல்துறை பறிமுதல் செய்தது.

அச்சம்பவம் பந்தயச் சட்டம், கூட்டரசு பிரதேச பொழுதுபோக்குச் சட்டம், குடிநுழைவுச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

சட்டவிரோதச் சூதாட்டம், அங்கீகரிக்கப்படாத பொழுதுபோக்கு இடங்களை இயக்குவது, ஆவணமின்றி நுழைதல் அல்லது வசித்தல் ஆகிய குற்றங்களை அது உட்படுத்தியிருக்கிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், சிறைத் தண்டனையும், பெருந்தொகையிலான அபராதங்களும் விதிக்கப்படலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!