
அலோர் ஸ்டார், நவம்பர்-15,கெடா அரசாங்கக் கட்டட வளாகத்திற்குள் கத்தியுடன் நுழைய முயன்ற 45 வயது ஆடவர் ஒருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
அலோர் ஸ்டாரிலுள்ள விஸ்மா டாருல் அமான் அரசாங்க வளாகத்தில் நேற்று காலை 8.10 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
சந்தேக நபர், மோட்டார் சைக்கிளில் பாதுகாப்புச் சாவடியில் நிற்காமல் வளாகத்திற்குள் நுழைய முயன்றுள்ளார்.
அவரைத் துரத்திச் சென்ற பாதுகாவலர், வளாகத்திற்குள் நுழைந்ததற்கான காரணத்தைக் கேட்டபோது, சந்தேக நபர் தனது கால்சட்டைப் பையிலிருந்து 15 சென்டிமீட்டர் நீளமுள்ள கத்தியை எடுத்து மிரட்டினார்.
பின்னர் அங்கிருந்து தப்பியோட முயன்ற அவர், பாதுகாவலரால் தடுத்து நிறுத்தப்பட்டு, போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சந்தேக நபருக்கு முந்தைய குற்றப்பதிவுகள் எதுவும் இல்லை என கோத்தா ஸ்டார் மாவட்டப் போலீஸ் கூறியது.
என்றாலும், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர்ப் பரிசோதனையில் _methamphetamine_ மற்றும் _amphetamine_ போதைப்பொருட்கள் உட்கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
ஆயுத சட்டத்தின் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் நிகழ்ந்த விஸ்மா டாருல் அமான் வளாகத்தில் கெடா சுல்தானின் அலுவலகம், மாநில சட்டமன்றம் மற்றும் மந்திரி பெசாரின் அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



