Latestமலேசியா

கல்வி வாய்ப்புகளை திறமையின் அடிப்படையில் வழங்வீர்; UTeM அரசு விருது பெற்ற நவீன் முத்துசாமி

மூன்று வருட கல்வி. அதன்பின் தேர்வு, தேர்வு முடித்ததும் புத்தகங்களை எடைக்குப் போட்டு விட்டு மூளையைக் கழுவிக் காயப் போடும் சில மாணவர்கள் மத்தியில், அரசு விருதையும் பெற்று சிறுபான்மை மக்களுக்கும் கல்வி வாய்ப்புகள் வழங்கப்பட்டால் சாதனை படைப்பதற்கு பலர் தயாராய் இருப்பர் என்ற துணிச்சலான ஏற்புரை வழங்கிய UTeM மாணவன் நவீன் முத்துசாமியை நம்மால் மறக்க இயலுமா என்ன?

5 வருடதிற்கு முன்னதாக பக்கவாதம் ஏற்பட்ட காரணத்தினால் அவரின் தந்தையால் தொடர்ந்து பேருந்து நிலையத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்ற இயலாமல் போக, பால் மரம் வெட்டும் அவரின் அம்மாவின் தொழில்தான் அவருக்கும் அவரின் தங்கையின் படிப்பிற்கும் இன்றளவும் துணைபுரிகிறது.

இந்த சூழலில்தான் மலாக்கா UTem பல்கலைக்கழகத்தின் அரசு விருதுக்கான தங்க பதக்கத்துடன், 7500 ரிங்கிட் வெகுமதியும் சான்றிதழும் பெற்று பெற்றோருக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் நவீன்.

அதே பட்டமளிப்பு விழாவில் ‘Quota system’என்ற முறையால் சிறுபான்மை மாணவர்களுக்கு மறுக்கப்படும் சில சலுகைகள் குறித்து நவீன் ஆற்றிய உரை வைரலாகி பலரின் கவனத்தை தன் வசம் ஈர்த்தார் அவர்.

சிறுபான்மை மக்களின் பிரச்சனையைப் பேசுவதற்கு சரியான தளம் இல்லாதது மட்டுமல்லாமல் நமக்குள் இருக்கும் பயமும் நமக்கான உரிமையைப் பெறுவதற்கு தடைக்கல்லாக இருப்பதாக கூறுகிறார் நவின் .

உடனடியாக ஒரு சிக்கலுக்கு தீர்வு இல்லையென்றாலும், மீண்டும் மீண்டும் தொடர்ந்து கோரிக்கை முன்வைக்கப்படும்போது அதற்கு தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தான் பேசிய உரை, பலரின் பாராட்டைப் பெற்றாலும், இன்னும் சிலர் அதற்கு மறுப்பு தெரிவிக்கத்தான் செய்கின்றனர்.

ஆனால், உயர்கல்விக்கூடங்களில் இட ஒதுக்கீடுக்கான பிரச்சனையைக் களைய சம்பந்தப்பட்ட தரப்பினரும் அரசாங்கமும் அதன் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனும் கருத்தில் தான் உறுதியாக இருப்பதாக கூறுகிறார் நவீன்.

‘அரசங்கத்திடமும் கல்வி அமைச்சிடமும் கேட்பது இன ரீதியிலான இட ஓதுக்கீட்டைமுழுமையாகத் தடை செய்வது அல்ல.

ஆனால் அதில் அதிக குளறுபடிகள் இருக்கின்றன.

எனவே 100% விழுக்காட்டு ஒதுக்கீட்டை 70% ஆக குறைத்து 30% meritocracy -ஆக அதாவது தேர்ச்சி அடிப்படையில் மாற்றலாம்.

இது திறமையின் அடிப்படையில் பலர் பல்கலைக்கழகத்தில் கால்பதிக்கும் வாய்ப்பை உருவாக்கும் என்கிறார் நவின்.

பல்கலைக்கழகத்தில் படித்தோம், முடித்தோம் வேலைக்குச் சென்றோம் என தன்னுடைய சுய மேம்பாட்டை மட்டும் கருதாமல், சமூக நலனுக்காக குரல் கொடுக்க துணிந்திருக்கும் இந்த இளைஞரின் நடவடிக்கை வரவேற்கக்கூடியது. இவர் போன்றோரின் துணிச்சல் “இளையோர் சமுதாய அக்கறை இல்லாதவர்கள்” எனும் கூற்றை பொய்யாக்குகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!