
காஜாங், ஜூன்-22-காணாமல் போன பணப்பையைக் கண்டெடுத்து, அதிலிருந்த 10 ஆயிரம் ரிங்கிட் ரொக்கப் பணத்தைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் உணவு விநியோக ஊழியரின் தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர், காஜாங் செமஞேயிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியில், சீன நாட்டின் பெண்மணி ஒருவர் முன்னதாக தனது பணப்பையைத் தவறவிட்டுள்ளார்.
அந்தப் பணப்பையில் 10 ஆயிரம் ரிங்கிட் ரொக்கம் இருந்துள்ளது.
இது குறித்து அப்பெண் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 37 வயதுடைய உணவு விநியோக ஊழியர் ஒருவர் அந்தப் பணப்பையைக் கண்டெடுத்து, உரியவரிடம் ஒப்படைத்தது தெரியவந்தது.
ஆனால், பணப்பை திரும்பக் கிடைத்தபோது அதிலிருந்த 10 ஆயிரம் ரிங்கிட் பணம் முழுவதும் காணாமல் போயிருந்ததாம்.
பணத்தை தான் எடுக்கவில்லை என சந்தேக நபர் மறுத்துள்ளபோதிலும், அவரிடம் கூடுதல் விசாரணை நடத்துவதற்காக ஜூன் 23-ஆம் தேதி வரை போலீஸ் தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக காஜாங் மாவட்ட போலீஸ் உறுதிப்படுத்தியது.
குற்றவியல் சட்டத்தின் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்பட்டு வருகிறது.



